
அன்புள்ள யாத்ரீக மணவாட்டியே,
இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காரியங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க முடியாது; அது இன்று தான் நடந்துகொண்டிருக்கிறது. இதுதான் வேளை! இதுவே நேரம்! அது நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இதுவே. தேவன் அதை வாக்களித்தார், அது இங்கே உள்ளது.
நமக்கு ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் உண்டு; இந்த தேசத்தின் அக்கிரமம் நிறைவாக்கப்பட்டுள்ளது. வேளையானது வந்துவிட்டது. அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இதுவே. வெறுமனே மற்றொரு நாட்டுக்கு செல்வது அல்ல, ஆனால் நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இதைக் குறித்து சற்று யோசித்துப் பாருங்கள், நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பது ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானதாகும். இதை நிரூபிக்கும்படிக்கு தேவன் தம்முடைய வார்த்தையினால், நமக்கு மத்தியிலே மாம்சத்தில் வெளிப்பட்டதாய் இது உள்ளது. மற்ற எந்த தீர்க்கதரிசியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக செய்த ஒரு தீர்க்கதரிசி. இது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, ஆயிர வருட அரசாட்சிக்கு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிற அக்கினி ஸ்தம்பமாகும்.
அவர் நம்முடைய தீர்க்கதரிசியைத் தெரிந்துகொண்டு, அவர் தவறாக புரிந்து கொள்ளப்படாதபடிக்கு, இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளமான அக்கினி ஸ்தம்பத்தை அவருக்கு அளித்தார். தீர்க்கதரிசி என்னக் கூறினாரோ அது தேவனுடைய வார்த்தைகளாய் இருக்கின்றன. அவர் நம்முடைய தீர்க்கதரிசியைக் கொண்டு சென்று, அவருக்குப் பயிற்சியளித்து, அதன்பின்னர் நமக்குத் தம்மை ரூபகாரப்படுத்தும்படிக்கு, அவருடைய வார்த்தையின் முழு வெளிப்பாட்டையும் நமக்குத் தரும்படிக்கு அக்கினி ஸ்தம்பத்தோடு அவரை நம்மிடத்திற்கு திரும்ப அனுப்பினார்.
அந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நாம் செல்ல விரும்பினால், நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது, தேவனால் தம்முடைய திட்டத்தை மாற்ற முடியாது, அவர் மாற்றவும் மாட்டார். அவர் தேவனாய் இருக்கிறார், அவரால் அதை மாற்ற முடியாது. அவர் ஒரு குழுவுடன் ஒருபோதும் தொடர்புகொள்ளமாட்டார். அவர் ஒருபோதும் அவ்வாறு தொடர்பு கொண்டதில்லை. அவர் நம்முடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறார். இந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை வழிநடத்த மல்கியா 4-ஐ அனுப்புவதாக அவர் தம்முடைய வார்த்தையில் நமக்கு வாக்களித்து, அதையே அவர் செய்துள்ளார்.
ஆனால், நீங்கள் பாருங்கள், கர்த்தரால் உண்டாயிருந்தது என்று ஆகாப் கருதியிருந்த ஒரு முறைமையை அவன் உடையவனாயிருந்தான். அவன், "நான் அவர்களில் நானூறு பேருக்கு, பள்ளிப்படிப்பும் பயிற்சியும் அளித்து வைத்துள்ளேன்" என்றான். இன்றைக்கு ஊழியக் குழுக்கள் செய்வது போல, அவர்கள் எபிரெய தீர்க்கதரிசிகளாக உரிமை கோருகிறார்கள்.
அநேகர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் தேவனுடைய ஏழாம் தூதனான செய்தியாளர், நம்முடைய மேய்ப்பர், அவருடைய மணவாட்டியை வழிநடத்த உலகின் மேய்ப்பராக இருக்கிறார், பண்டைய எலியாவைப் போலவே.
அவர் மல்கியா 4:5-ஆகவும், வெளிப்படுத்துதல் 10:7-ஆகவும் இருக்கிறார். வேதம் அவரைக் குறித்து முன்னறிவித்த அனைத்து வேதவாக்கியங்களின் நிறைவேறுதலாய் அவர் இருக்கிறார். அதுவே இந்தச் செய்தியாய், இந்தச் சத்தமாய், அதுவே தம்முடைய மணவாட்டியை அழைக்கிற தேவனுடைய சத்தமாய் இருக்கிறது. இதுவே இன்றைக்கான தேவனுடைய திட்ட வரைபடமாக இருக்கிறது.
இது அதே அபிஷேகிக்கப்பட்ட முறைமையினால், அதே அக்கினி ஸ்தம்பமாக இருக்கிறது. அதே தேவன் அதே காரியங்களைச் செய்கிறார்.
இப்பொழுது வார்த்தை மாம்சமாகி, அவருடைய வார்த்தையான மணவாட்டியாகிய, நம்முடைய மாம்சத்தில் நம்மிடையே வாசமாயிருக்கிறது.
நம்மை இரட்சித்த, நம்மை முன்குறித்த, நம்மை நீதிமான்களாக்கின, அவர் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும்: நாம் அவரிடத்தில் கதறி, அவருக்கு நன்றி கூறி, அவரைத் துதித்து, அவரை ஆராதிப்போமாக.
அவர் இப்போது நமக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்; நமக்கு வெளிப்பாட்டின் மேல் வெளிப்பாட்டை தந்து, நாம் யாராய் இருக்கிறோம் என்பதை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்யப் போகிறார்…நித்தியத்தினூடாக அவரோடு இருக்கும்படியாக, அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற நம்முடைய வருங்கால பரலோக வீட்டிற்கு நம்மை கொண்டு செல்ல அவருடைய மணவாட்டியான நம்மை அழைத்துச் செல்லவே வருகிறார்.
நமக்கு தேவை என்னவாயிருந்தாலும், அவரிடத்தில் முறையிடுவோம். அதைத்தான் அவருடைய பிள்ளைகள் செய்யும்படிக்கு அவர் விரும்புகிறார். நாம் திருப்தியடைந்து நமக்குத் தேவைப்படுகிறதை பெற்றுக் கொள்ளும்படியாக அவரிடத்தில் முறையிடுவோம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, மூன்றாம் யாத்திரை 63-0630M என்ற செய்தியை குறித்த எல்லாவற்றையும் உலகத்திற்கு தேவனுடைய மேய்ப்பராயிருக்கிற வில்லியம் மரியன் பிரான்ஹாம் எங்களிடத்தில் சொல்வதைக் கேட்க அவருடைய மணவாட்டியின் ஒரு பாகத்தோடு வந்து இணைந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:
யாத்திராகமம் 3:1-12
ஆதியாகமம் அதிகாரம் 37
ஆதியாகமம் அதிகாரம் 43