
அன்புள்ள விழித்துக் கொண்டும் & காத்துக் கொண்டுமிருப்பவர்களே,
மணவாட்டி மத்தியில் முன் எப்போதும் இல்லாத ஒரு உற்சாகம் நிலவுகிறது. நாம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம்; நமது ஜூபிலி ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நாள் வருவதற்கு மணவாட்டி நீண்ட நேரம் காத்திருந்தாள். புறஜாதி யுகத்தின் முடிவு வந்துவிட்டது, நம்முடைய கர்த்தருடனான நித்தியத்தின் ஆரம்பம் விரைவில் தொடங்கும்.
நாம் வாழும் காலத்தை வார்த்தையைக் கேட்பதனால் புரிந்து கொள்கிறோம். நேரம் கடந்துவிட்டது. எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான நேரம் சமீபித்துவிட்டது. நாம் வந்துவிட்டோம். பரிசுத்த ஆவியானவர் வந்து அவருடைய மணவாட்டிக்கு எல்லா மகத்தான, ஆழமான, இரகசிய காரியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் பதறலில் இருந்து, தேவனைத் தேடுகிறோம்; நம்மை ஆயத்தப்படுத்துகிறோம். இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டோம். இந்த வாழ்க்கையின் கவலைகள் நமக்கு ஒன்றுமில்லை. நம்முடைய விசுவாசம் முன்னெப்போதையும் விட அதிக உயரத்தை எட்டியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட அம்மாளை அழைத்துச் செல்லும்படியாய் அவளுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக நிறைவேறிவிட்டன; யூதர்கள் திரும்பிப் போவது சரியாக நிறைவேறிவிட்டது. சபைக் காலம் சரியாக நிறைவேறிவிட்டது. நாம் முடிவுக் காலத்தில், முடிவு காலத்தில் இருக்கிறோம், லவோதிக்கேயா சபையின் காலத்தில், அதன் முடிவில் இருக்கிறோம். நட்சத்திர செய்தியாளர்கள் - தூதர்கள் யாவரும் தங்களுடைய செய்தியைப் பிரசங்கித்துவிட்டனர். அது புறப்பட்டுச் சென்றுவிட்டது. நாம் அருகே நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
என்னே ஒரு நம்ப முடியாத ஆனால் உண்மையான நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும் இல்லாத வகையில் சத்துரு ஒவ்வொருவரையும் தாக்குவது மிகவும் கடினமான காலகட்டம். அவன் தன்னிடம் உள்ள அனைத்தையும் நம் மீது வீசுகிறான். அவன் பதறலில் இருக்கிறான், ஏனென்றால் அவனுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறிவான்.
ஆனால் அதே நேரத்தில், நாம் நம்முடைய ஜீவியங்களில் இதைப் போன்று ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
● நாம் இதைப் போன்று ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்கியதில்லை.
● பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரையும் நிரப்புகிறார்.
● அவருடைய வார்த்தையின் மீது நமக்குள்ள அன்பு இதைப் போன்று ஒருபோதும் மகத்தானதாக இருந்ததில்லை.
● அவருடைய வார்த்தையின் நம்முடைய வெளிப்பாடு நம்முடைய ஆத்துமாவை நிரப்புகிறது.
● நாம் ஒவ்வொரு சத்துருவையும் வார்த்தையால்தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும், நாம் யார் என்பதில் இதைப் போன்று உறுதியாக இருந்ததில்லை:
• முன்குறிக்கப்பட்டது
● தெரிந்து கொள்ளப்பட்டது
● தேர்ந்தெடுக்கப்பட்டது
● ராஜரீக வித்து
● இனிய இருதயம்
● நித்திய, வெள்ளை அங்கி தரித்த, திருமதி. இயேசு, ஒளிநாடாவைக் கேட்பது, பிரகாசமாக்கப்பட்ட, கற்புள்ள கன்னி, ஆவியால் நிரப்பப்பட்ட, வெல்ல முடியாத, புத்திர சுவிகாரமாக்கப்பட்ட, கலப்படமற்ற, கன்னி வார்த்தை மணவாட்டி.
அடுத்து என்ன வரப்போகிறது? கல் வருகிறது. நாம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் விழித்துக் கொண்டும், காத்துக் கொண்டும், ஜெபித்துக் கொண்டுமிருக்கிறோம். அவருடைய வருகைக்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
அது, "நாம் அப்படி நம்புகிறோம்" என்பதில்லை, நமக்குத் தெரியும். இனி சந்தேகங்களே இல்லை. ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் அது முடிந்துவிடும், நாம் நம்முடைய கல்யாண விருந்தில் அவரோடும் நம்முடைய எல்லா அன்புக்குரியவர்களோடும் மறுபுறம் இருப்போம்.
அது தான் ஆரம்பம்...மற்றும் முடிவே இல்லை!!
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அனுப்பின அவருடைய பலமுள்ள தூதன் மூலமாக பேசி, தேவனுடைய எல்லா இரகசியங்களையும் சொல்லி வெளிப்படுத்தப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் அந்த கலியாண விருந்துக்கு ஆயத்தமாக வாருங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0806 - தானியேலின் எழுபதாம் வாரம்